ஓ.பன்னீர் செல்வத்தின் அதிகாரம் பறிப்பு : பின்னணி என்ன?

அதிமுகவின் ஐவர் அணியில் இருந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட மூன்று பேரை கட்சி பணிகளிலிருந்து விலக்கி வைத்ததிலிருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி ஆக்சனில் இறங்கியுள்ளார் என்று தெரிகிறது. ஒரு பக்கம் சட்டசபை தேர்தல் சம்பந்தமாக, அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஜெயலலிதாவோ அதிமுகவில் உள்ள களைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. தொடக்கத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிகாரத்தில் இருந்தது சசிகலாதான். அவருக்கு எந்த பதவியும் இல்லை என்றாலும், அவர் வைத்ததுதான் சட்டம். அமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு அவரின் கடைக்கண் பார்வை கிடைத்தால்தான் எல்லாமே நடக்கும். அதனால் அவரை தாஜா செய்தே அதிமுக பிரமுகர்கள், எம்.எல்.ஏக்கள் தங்கள் காரியங்களை சாதித்து வந்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலியே சசிகலா குடும்பத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. அதன்பின் மீண்டும் கட்சியில் சசிகலா இணைக்கப்பட்டார். ஆனால் அதிகாரம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, நால்வர் அணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டது நால்வர் அணி. அதில் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அடக்கம். அதன்பின் அந்த அணியில் அமைச்சர் பழனியப்பன் சேர்க்கப்பட்டார். அதன்பின் நால்வர் அணி, ஐவர் அணியாக மாறியது. கட்சி நிர்வாகிகளையும், கட்சி பிரமுகர்கள் மீது வரும் புகார்களையும், ஆட்சியில் உள்ள முக்கிய நிர்வாகத்தையும் அவர்கள்தான் கவனித்து வந்தார்கள். அதன்பின் அவர்கள் வைத்ததே அதிமுகவின் சட்டமாகியது. கட்சி செயல்பாடு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை முன்னின்று நடத்துவது என்பது போன்ற முக்கிய பணிகளில் அவர்களே ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த ஐவர் அணி, வருகிற சட்டசபை தேர்தலில் ஏராளமானோருக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கி, ஏராளமான சொத்துக்களை குவித்ததாக ஜெயலலிதாவிற்கு புகார் போனது. அதையடுத்து அவர்களை நேரில் அழைத்து பேசிய ஜெயலலிதா அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார். அதன்பின் அவர்கள் கட்சி பணிகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அதனால்தான் அதிமுக சார்பில், இந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற எந்த நிகழ்ச்சிகளிலும் அவர்கள் தலை காட்டவில்லை. வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடைபெறுவதால், ஜெயலலிதாவே நேரிடையாக களத்தில் இறங்கினார். சமீபத்தில் நடந்த வேட்பாளர் நேர்காணலை அவரே முன்னின்று நடத்தினார். இதிலேயும் ஐவர் அணி அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுடன் ஜெயலலிதா ஒரு சந்திப்பு நடத்தினார். அதில், ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மூவரும் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது வேளன்மை துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, எஸ்.பி நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் கொண்ட நால்வர் அணி புதிதாக உதயமாகியுள்ளது. இனி இவர்கள்தான் கட்சி பணிகளில் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிகிறது. அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலுக்குக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் குழுவிலும், ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் பழனியப்பன் ஆகியோர் இடம் பெறவில்லை. எனவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கூட இந்த புதிய நால்வர் அணிதான் பேச்சு வார்த்தை நடத்தும் எனவும், இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் எனவும் தெரிகிறது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அந்த குழுவில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். அதிமுக வெற்றி பெற்ற பிறகு செங்கோட்டையன் அந்த குழுவில் இருந்து தூக்கப்பட்டார். தற்போது ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர். என்னதான் அமைச்சர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டாலும், ஜெயலலிதா நினைக்கும் வரை மட்டும்தான் அதிமுகவில் எல்லாமே நீடிக்கும். அவர்களின் அமைச்சர் பதவி உட்பட. தன்னுடைய உடல் நிலையை காரணமாக வைத்து யாரும் கட்சியை கைப்பற்றிவிடக்கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாகவே இருக்கிறார். அதனால்தான் தன்னை மீறி செயல்படுபவர்களை அவ்வப்போது ஓரங்கட்டி வருகிறார். அதிமுக கட்சியை ஜெயலலிதா கைப்பற்றியதிலிருந்தே அவரின் நடவடிக்கை இதுதான். இன்னும் அவரின் நடவடிக்கைகளின் எத்தனை பேர் சிக்குவார்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம்..
Labels:
News
,
other
No comments :
Post a Comment