ஜெயலலிதா “பொன்னியின் செல்வி” என்று பட்டப்பெயர் சூட்டிக்கொண்டால் போதுமா? - விஜயகாந்த் கேள்வி

Share this :
No comments

முதலமைச்சர் ஜெயலலிதா “பொன்னியின் செல்வி” என்று பட்டப்பெயர் சூட்டிக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கு ஏற்றாற்போல் விவசாயிகளின் நலனில் சிறிதாவது அக்கறை காட்டியிருக்கவேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அதிமுக ஆட்சியில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்திலும், அதிலும் குறிப்பாக தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணி கையில் அடுத்த இடத்திலும் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதிமுக அரசு விவசாயிகளின் நலனுக்கான வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட விவசாயி பாலன் டிராக்டருக்காக வாங்கிய கடன் தொகையில், இரண்டு தவணைகள் செலுத்தாமல் இருந்தமைக்காக காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கதாகும். அதற்கு காரணமான காவல் துறையினரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட விவசாயி அழகர் டிராக்டருக்காக வாங்கிய கடனில், மூன்று தவணைகள் செலுத்தாமல் இருந்தமைக்காக அவமானப்படுத்தப்பட்டதால், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இந்த சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்ததால், அது அனைவருக்கும் தெரியவந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், அதிமுக அரசின் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிலையில்தான் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். அவர்களின் இன்னல்கள் வெளியே தெரிவதில்லை. இதுதான் இன்றைய விவசாயிகளின் உண்மையான நிலையாகும். விவசாயிகளுக்கு உரிய முறையில் கூட்டுறவு வங்கிகளிலும், தேசிய வங்கிகளிலும் கடன் வழங்கப்பட்டிருந்தால், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடனுக்காக கையேந்தும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்குமா? விவசாயிகளுக்கு தேவையான கடன்களை அதிமுக அரசு முறையாக வழங்கியிருந்தால், விவசாயிகளின் தற்கொலையையும், அவர்கள் மீதான தாக்குதலையும் தடுத்திருக்கமுடியும். முதலமைச்சர் ஜெயலலிதா “பொன்னியின் செல்வி” என்று பட்டப்பெயர் சூட்டிக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கு ஏற்றாற்போல் விவசாயிகளின் நலனில் சிறிதாவது அக்கறை காட்டியிருக்கவேண்டும். நமது நாட்டில் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்தப்படுகிறார்கள். அதற்கு உதாரணம்தான், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனை பெற்ற விஜய்மல்லையா, சுகபோகமாக, எவ்வித இடையூறும் இல்லாமல் வெளிநாடு பறக்கிறார். அனைவருக்கும் உண்ண உணவு கொடுக்கும் விவசாயி, தான் பெற்ற கடனுக்கு தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது. விஜய் மல்லையாவிற்கு ஒரு நியாயம், ஏழை விவசாயிக்கு ஒரு நியாயமா? இதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதா? எனவே இந்த சம்பவங்களில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அதற்கு துணையாக வந்த குண்டர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் கடும்நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தடுத்திடவேண்டும். மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment