நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாமக 2300775 வாக்குகளை பெற்று 5.3 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது.

எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது பாமக. அதன் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், மாநிலம் முழுவதும் பாமகவுக்கு 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேர் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும், நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர். திராவிட கட்சிகள் பண பலத்தினால் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தோல்விகளால் நாங்கள் துவண்டு போய் விடவில்லை, முன்பை விட வேகமாக பணியாற்றுவோம் என்றார்.

வருங்காலங்களிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. பாமக தனித்தே போட்டியிடும் என கூறிய நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது என்றார்.

வெற்றி பெற்ற அதிமுக, திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட அன்புமணி, சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம் என்றார்.

இனிமேல் தனித்து தான் போட்டியிடுவோம்: அடம்பிடிக்கும் அன்புமணி



தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் சிவக்குமார் முதல்நபராக வாழ்த்து தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. இதனால், அக்கட்சி சார்பில் மீண்டும் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், நேற்று தேர்தல் வெற்றி தோல்வி நிலவரம் வெளியாகிக் கொண்டு இருந்தது. யார் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என கிளைமாக்ஸ் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளே தயக்கம் காட்டிய நிலையில், நடிகர் சிவக்குமார் , அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல் நபராக பொக்கே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சிவக்குமாரின் இந்த அதிமுக பாசத்தை தமிழ் திரையுலகமும், அரசியல் களமும் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்கிறது.

நான்தான் பஸ்ட், மற்றவர்கள் நெக்ஸ்ட்: இது சிவக்குமார் ஸ்டைல்



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தோல்வி அடைந்தது குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

காட்டுமன்னார்கோயில் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மக்கள் நலக்கூட்டணி சார்பில், மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் வெறும், 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதியில், திருமாவளவன் என்கிற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு, அவர் 289 வாக்குகளை அள்ளிவிட்டாராம்.

இந்த தொகுதியில் உள்ள சிலர் அந்த திருமாவளவன் தான் இந்த திருமாவளவன் என கருதி மாற்றி வாக்களித்துவிட்டாக கூறப்படுகிறது. இதனாலே, வி.சி.தலைவர் திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆளும் கட்சி வரித்த வலையில் இதுவும் ஒரு வகை என அரசியலில் வர்ணிக்கப்படுகிறது.

ஐய்யோ... சொக்கா...திருமாவளவன் வீழ்ந்தது எப்படி தெரியுமா?



அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நான் அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களார்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி, தமிழக தேர்தல் கமிஷன் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் கடந்த 12ஆம் தேதி நடக்க இருந்த தேர்தலை நிறுத்தியது.

மேலும், அந்த இரண்டு தொகுதிகளிலும் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்னும் மூன்று வாரங்களுக்கு அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி “ தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி, திமுகவிற்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள்.

அங்கு தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தாவிட்டால் அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன் : கருணாநிதி அதிரடி



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 26001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அனிதா ராதாகிருஷ்ணன் 88357 வாக்குகளும், சரத்குமார் 62356 வாக்குகளும் பெற்றனர்.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சரத்குமாரின் மனைவி ராதிகா, திருச்செந்தூர் மக்கள் காட்டிய அன்பு, பாசத்திற்கு நன்றி. இந்தத் தேர்தலில் நாங்கள் தோற்றதாகக் கருதவில்லை. மீண்டும் வெற்றிக்குப் போராடும் ஒரு வாய்ப்பாகத்தான் கருதுகிறோம் என கூறினார்.

சரத்குமாரின் தோல்விக்கு ராதிகாவின் பதில் என்ன தெரியுமா?



புவியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் மோதியுள்ளது என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

வட மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பாறைகளில், அந்தப் பெரும் மோதலில் வெடித்துச்சிதறி ஆவியாகிபோன சில தாதுப்பொருட்கள் சிறிய கண்ணாடிபோன்ற மணிகளில் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அவ்வளவு பெரிய விண்கல் பூமியின் மீது மோதியது நிலநடுக்கங்களையும், எரிமலை வெடிப்புகளையும் உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து ஆட்சியமைக்க உள்ளது.

கடந்த அமைச்சரவையில் இருந்த பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போதைய அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அமைச்சர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக அமைக்க இருக்கும் ஆட்சியில் இடம்பெற இருக்கும் அமைச்சர்களின் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வரும் 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதுகுறித்த விவரம் பின்வருமாறு.


1. ஆர்.கே. நகர்-ஜெ.ஜெயலலிதா-முதல்வர்-உள்துறை, சட்டம் ஒழுங்கு

2. போடிநாயக்கனூர்-ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை

3. மயிலாப்பூர்-ஆர்.நடராஜ்-சட்டம் மற்றும் சிறைத்துறை

4. ராயபுரம்-ஆர்.ஜெயகுமார்-மீன்வளம், கால்நடைத் துறை

5. ஆவடி-மாபா.பாண்டியராஜன்-தகவல் தொழில்நுட்பம்

6. மதுரவாயல்-பா.பெஞ்சமின்- உள்ளாட்சி, நகர நிர்வாகம்

7. திருத்தணி-பி,எம்.நரசிம்மன்-கூட்டுறவுத் துறை

8. ஜோலார்பேட்டை-கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை

9. செய்யாறு-தூசி கே.மோகன்-பால்வளத் துறை

10. வாணியம்பாடி-நீலோபர் கபில்-சிறுபான்மையினர் நலன்

11. பாப்பிரெட்டிப்பட்டி-பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை

12. விழுப்புரம்-சி.வி.சண்முகம்-பொதுப்பணித் துறை

13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு-மதுவிலக்கு அமலாக்கத் துறை

14. ஏற்காடு-சித்ரா-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

15. எடப்பாடி-கே.பழனிச்சாமி-தொழிலாளர் நலத் துறை

16. ராசிபுரம்-சரோஜா-மகளிர் நலன், சமூக நலத் துறை

17. குமாரபாளையம்-கே.டி.தங்கமணி-கைத்தறி, ஜவுளித் துறை

18.கோபிசெட்டிபாளையம்-கே.ஏ.செங்கோட்டையன்-போக்குவரத்துத் துறை

19. திருப்பூர் வடக்கு-விஜயகுமார்-இந்து சமய அறநிலையத் துறை

20. தொண்டாமுத்தூர்-எஸ்.பி.வேலுமணி-வேளாண்மைத் துறை

21. பொள்ளாச்சி-வி. ஜெயராமன்-சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை

22. திண்டுக்கல்-சி. சீனிவாசன்-வருவாய்த் துறை

23. வேதாரண்யம்-ஓ.எஸ்.மணியன்-பத்திரப் பதிவு, வணிகவரித் துறை

24. கடலூர்-எம்.சி.சம்பத்-வனத்துறை

25. நன்னிலம்-காமராஜ்-உணவுத் துறை

26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை

27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு-நீர்ப்பாசனத் துறை

28. திருமங்கலம்-ஆர்.வி.உதயகுமார்-மின்சாரத் துறை

29. சிவகாசி-கேடி.ராஜேந்திர பாலாஜி-செய்தித் துறை

30. உடுமலை-ராதாகிருஷ்ணன்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை

31. ஸ்ரீவைகுண்டம்-சண்முகநாதன்-கனிமவளத் துறை

32. ராதாபுரம்-இன்பதுரை-சுற்றுலாத் துறை

இதுதவிர, அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.தனபால் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணைசபாநாயகராக மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலை பொறுப்பேற்கலாம் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அமைச்சரவை பட்டியல் இணையத்தில் பரவி வருகிறது.

அதிமுக புதிய அமைச்சரவை பட்டியல்: இணையத்தில் கசியும் தகவல்



நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய சரிவை சந்தித்த விஜயகாந்தின் தேமுதிக தேர்தல் ஆணையத்தில் தனது கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து, தேமுதிகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முரசு சின்னத்தையும் இழக்கிறது.

2006-இல் முதல் முறையாக தேர்தலை சந்தித்த தேமுதிக 10 சதவீத வாக்குகளை பெற்று அனைவரையும் வியக்க வைத்தது. மீண்டும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை பெற்றது.

இதனால் தமிழக அரசியலில் விஜயகாந்தின் மவுசு கூடியது. 2011 சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுக்க போட்டி போட்டது. கடைசியில் அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக 7.8 சதவீத வாக்குகளுடன் 29 எம்.எல்.ஏ-க்களையும் பெற்று எதிர்கட்சியாக உருவெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பின்னர் அதிமுக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் 2015 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் 5.1 சதவீதமாக தனது வாக்கு வங்கியை குறைத்துக்கொண்டது.

இருந்தாலும் விஜயகாந்துக்கான மவுசு குறையவில்லை, இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுக்க கட்சிகள் போட்டி போட்டன. கடைசியில் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் தேமுதிக மண்ணை கவ்வியது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த தேர்தலில் தேமுதிக வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் இருக்க வேண்டும். இதன் மூலம் தேமுதிக மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழப்பதுடன் முரசு சின்னத்தையும் இழக்கிறது.

கடந்த முறை தேமுதிக 5.1 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தாலும் 29 எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியாக இருந்ததால் அந்த அங்கீகாரத்தை இழக்காமல் இருந்தது. இந்த முறை எந்தவித கவசமும் இல்லாமல் வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டும் வைத்துள்ளதால் தேமுதிக மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்கிறது.

அங்கீகாரத்தை இழந்த தேமுதிக: முரசு சின்னத்தை இழக்கிறது!



மநகூட்டணி மற்றும் தேமுதிகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட
விஜயகாந்த் உளூந்தூர்பேட்டையில் டெபாசிட்கூட வாங்காமல் மோசமான தோல்வியை தழுவினார்.

குறைவான வாக்கு சதவீதம் காரணமாக மாநில கட்சிக்கான அந்தஸ்தை தேமுதிக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி அரசியல் கட்சி அந்தஸ்தை இழக்கும்பட்சத்தில், முரசு சின்னத்தையும் அக்கட்சி இழக்கக்கூடும்.

இந்த மாபெரும் அதிர்ச்சியில் இருக்கும் தனது கட்சி தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாக, 'நம் வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது, மனம் தளரவேண்டாம். நாம் ஆட்சியமைப்பது உறுதி' என்று விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் 'தமிழன் என்று சொல்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.


தோல்வியை சகஜமாக எடுத்துக் கொண்டு தலைவரே படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் என்று தேமுதிக தொண்டர்களும் ஆசுவாசம் அடையும்வகையில் 'தமிழன் என்று சொல்' படத்தின் புகைப்படங்களை விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டெபாசிட் இழந்த கையோடு நடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்



வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலைகொண்டிருந்தது அது தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. ரோணு என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஒடிசா நோக்கி நகர்வதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஒடிசா நோக்கி நகரும் இந்த புயல் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் வங்கதேசத்தில் சிட்டக்காங் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வட தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குமரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் இரணியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கனமழை காரணமாக பள்ளியாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் குமரியில் இருந்து திப்ரூகருக்கு செல்லும் ரயிலும், நாகர்கோயிலில் இருந்து மங்களூரு செல்லும் ரயிலும் செல்லவில்லை. அந்த வழித்தடத்தில் 7 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உருவாகியது ரோணு புயல்: தமிழகத்தில் மீண்டும் மழை



திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 93353 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற சீனிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பதவியேற்கும் முன்னரே எம்.எல்.ஏ. ஒருவரின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருப்பது அதிமுக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

65 வயதான சீனிவேல் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மதுரை மாவட்டம் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று மாலை அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஒரு சில தனியார் தமிழ் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் எனவும், மரணமடையவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேல் கவலைக்கிடம்: அதிமுகவினர் சோகம்



Jayalalithaa pays respect to Periyar after her victory



நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை நமீதா, அக்கட்சியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நமீதா, அதிமுகவின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், " புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!." எனக் கூறியுள்ளார்.

அதிமுகவின் வெற்றிக்கு நமீதாவின் 'நச்' பாயின்ட்!



தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால், ' 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பை பறித்திருக்கிறது நோட்டா வாக்குகள்' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சட்டசபை தேர்தலில் 'மாற்று' என்ற கோஷத்தை முன்வைத்து மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவு, மாற்று கோஷத்திற்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்துவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற கோஷமும் எடுபடவில்லை. அதே நேரத்தில், வெற்றிக் கோட்டைத் தொடுவதில் தி.மு.க கோட்டைவிட்டு விட்டது. பதினாறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், நோட்டா வாக்குகள் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளன.

ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4,994. தி.மு.க தோற்றுப் போனதோ 1,395 வாக்குகள் வித்தியாசத்தில். பர்கூரில் 982 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது தி.மு.க. இங்கு நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 1,382. சிதம்பரத்தில் நோட்டாவுக்கு 1,724 வாக்குகள் கிடைத்தது. தி.மு.கவோ 1,506 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைப் பறிகொடுத்தது. கரூரில் 3,595 வாக்குகள் நோட்டாவுக்கு, தி.மு.கவோ 3,154 ஓட்டில் தோற்றது. கிணத்துக்கடவு தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்தவை 3,884, தி.மு.கவுக்கு தோல்வியோ 1,332 வாக்குகள் வித்தியாசத்தில்.

கோவில்பட்டியில் 2,350 வாக்குகள் நோட்டா கணக்கில் வந்தன. இதே தொகுதியில் 428 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தோற்றது. மொடக்குறிச்சி தொகுதியில் நோட்டாவுக்கு 2,715 வாக்குகள் விழுந்தன. தி.மு.க இதே தொகுதியில் 2,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இதேபோல் ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பேராவூரணி, ராதாபுரம், தென்காசி, திருப்போரூர், தியாகராய நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நோட்டாவுக்கு, தி.மு.கவின் தோல்வி வித்தியாசத்தைவிட அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஏறக்குறைய 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு இப்படி நோட்டாவால் பறிபோயுள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.கவின் வாக்குகளை தே.மு.தி.க பிரித்ததால், தி.மு.க தோற்றது. இந்தமுறை மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க, பா.ம.க எனப் பல கட்சிகள் சிதறிப் போட்டியிட்டாலும், தி.மு.கவின் வாக்குவங்கி எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. 'எந்தக் கட்சி யாருடைய வாக்குகளைப் பிரிக்கும்? என்றுதான் தலைவர்கள் கணக்குப் போட்டார்களே தவிர, நோட்டாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், பிரதான கட்சிகளை 'நோட்டா' வை நோக்கி பார்க்க வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

அரசியல்வாதிகள் மீதும் அரசியல் மீதும் அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களால், மக்கள் நலக் கூட்டணி, சீமான் என களத்தில் வலம் வந்த கட்சிகளை விடவும் நோட்டா எடுத்த 1.3 சதவீத வாக்குகள் மிக முக்கியமானவை மட்டுமல்ல, அரசியல் அரங்கையும் அலற வைத்துவிட்டன.

தி.மு.கவை வீழ்த்திய நோட்டா! -பதற வைத்த 16 தொகுதிகள்



வெளியாகியுள்ள சட்டமன்ற தேர்தல் முடிவில் தேமுதிக மிகவும் சொற்பமான ஒட்டுகளையே வாங்கியுள்ளதால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் தொண்டர்கள் இல்லாமல் வெறுச்சோடி போயுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அரவங்குறிச்சி, தஞ்சாவுர் தவிர்த்து மொத்தம் 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேமுதிக தலைவர் இந்த முறை மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அதிமுக, திமுகவிற்கு மாற்று வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று மநகூ தலைவர்கள் கூறி வந்தனர்.

ஆனால், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் பின்னடைவை சந்தித்து மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டார். அதேபோல், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டிட்ட திருமாவளவன் 83 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேலும், மநகூ வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும், மிக சொற்பமான ஒட்டுகளையே பெற்றுள்ளனர்.

இதனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் தொண்டர்கள் யாரு இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.


பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

தேர்தல் முடிவு : வெறிச்சோடிப்போன தேமுதிக அலுவலகம்



தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே அதிமுக அமோகமாக முன்னிலை பெற்று வருகிறது. இதனால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி கூறியுள்ளார், வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறிய ஜெயலலிதா. மக்கள் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என கூறினார்.

மேலும், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற உழைப்பேன், திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் பொடி பொடியாக்கிவிட்டனர். தமிழக மக்களுக்கு என்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன் என கூறிய ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என குறிப்பிட்டார்.

முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி: தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும்!



திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் தோல்வியடைந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் ஆரம்பம் முதலே பின்னடைவில் இருந்தார்.

கடந்த தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரத்குமார், இந்த தேர்தலில் திருச்செந்தூரில் களம் இறங்கினார். திருச்செந்தூரில் செல்வாக்குடன் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை களம் இறக்கியது திமுக.

இந்நிலையில் ஆரம்பம் முதலே கவனிக்கப்பட்டு வந்த இந்த விஐபி தொகுதியில் சரத்குமார் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார். நடிகர் சங்க தேர்தல் தோல்வியை தொடர்ந்து இந்த தேர்தலிலும் சரத்குமார் தோல்வியடைந்துள்ளார்.

சரத்குமார் தோல்வி: அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி



தமிழகத்தில் புதிதாக அமையுள்ள அதிமுக அரசுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிவருகிறது. தமிழகத்தின் பெரும்பாலன தொகுதிகளில் அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது. இரண்டாம் இடத்தில் திமுக இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழக சட்டசபை யில் இதுவரை எந்த எதிர்க் கட்சிக்கும் இவ்வளவு பெரும்பான்மை கிடைத்தது இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம். புதிதாக அமையுள்ள அரசுக்கு தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிவருகிறது. தமிழகத்தின் பெரும்பாலன தொகுதிகளில் அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது. எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளிகள் என வர்ணிக்கப்படும் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் படுதோல்வி அடைந்தார்.

தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் சென்று வருகிறது.

திமுக தோல்வி முகம் கண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளியான சந்திரகுமார் மற்றும் மேட்டூர் தொகுதி பார்த்திபனும் தோல்வியை சந்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்காளிகள் காலி



தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வரும் 23-ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

17-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த அதிமுக திமுகவை விட அதிக இடங்களில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இதன் மூலம் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இதனையடுத்து பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறியுள்ளனர். மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியை கூறியுள்ளார்.

இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதிமுக தரப்பில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் முடிவு முழுமையாக வெளியான பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

23-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா!