அட... சென்னைல இப்படியும் நடக்குமா..?

Share this :
No comments


இந்த தேர்தல் பரபரப்பையும் தாண்டி ஒரு ஃபேஸ்புக் தகவல் நம்மை ஆச்சர்யப்படுத்தி, சிந்திக்க வைத்தது.

சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் போகும்போதும் வரும்போதும் முன்னால் சென்ற வாகனத்தை இடித்து, ஏதாவது உடைந்துவிட்டால் ஒரு ‘ஸாரி’ சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவோம். பாதிக்கப்பட்டவரும் , ‘இந்த நெரிசலில் ஏன் வம்பு’ என கடந்துபோய்விடுவார். இல்லையேல் இருதரப்பும் வாக்குவாதத்தில் இறங்கினால் கூட்டம் கூடி, போலீஸில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்குக்கூட போய்விடுவது உண்டு. இது, சென்னைவாசிகள் அன்றாடம் சந்திக்கும் காட்சி. சமயத்தில் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, போய் திரும்பிவந்து பார்க்கும்போது கண்ணாடி, லைட்டுகள், இண்டிகேட்டர்கள் உடைந்து இருப்பதை பார்த்திருப்போம். ‘எவன்டா இப்படி உடைச்சி வெச்சிருக்கான். அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...’ என்று கொலைவெறி கொள்வோம்.

அப்படி ஒரு வாகன ஓட்டியை கொலைவெறி நிலைக்கு கொண்டுபோன ஓர் உடைப்பு ஆசாமி, பிறகு தான்செய்த செயலால் அந்த வண்டி உரிமையாளரை நெகிழச் செய்து இருக்கிறார். மனிதமும் நேர்மையும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அந்த சம்பவம்.

கடந்த 14 ம் தேதி இரவு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே, மார்க் நைட் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தால், வண்டியின் பின்புறம் விளக்கு உடைந்து காணப்பட்டுள்ளது. ‘எவனோ உடைச்சுட்டு ஓடிட்டான்...’ என்று மார்க் மனசுக்குள் திட்டிக் கொண்டிருக்கும்போதே, வண்டியில் மாட்டிவைத்திருந்த அவரின் ஹெல்மெட்டுக்குள் ஒரு சிறிய வெள்ளை பேப்பர் சுருட்டி வைக்கப்பட்டு இருந்ததை கவனித்தார். அதனை பிரித்து பார்த்தால், உள்ளே 200 ருபாய் பணம். அத்துடன் வண்டியின் பின்புற லைட்டை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்டு சில வாசகங்கள். பணத்தையும் கடிதத்தையும் பார்த்த மார்க்குக்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. இந்த காலத்திலும் இப்படி மனிதர்க்ள் இருக்கிறார்களா? என்று அதனை படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில் மார்க், "சாலையில் அவசரமும் பொறுப்பற்றத்தன்மையுடன் நடந்துகொள்பவர்களுக்கு மத்தியில் மனிதத்தை வலியுறுத்தும்வகையில், அந்த நண்பர் இந்த காரியத்தை செய்திருக்கிறார். இன்னமும் எனக்கு அந்த நபர் வியப்பை அளிக்கிறார். நண்பர்களே இந்த விஷயத்தை தயவு செய்து ஷேர் செய்யவும். எனது நன்றி அந்த மனிதருக்கு சென்று சேர வேண்டும். இந்த விஷயத்தை யார் செய்தாலும் அவர் ஒரு நல்லமனிதர்" என்று பதிவிட்டுள்ளார். இது ஃபேஸ்புக்கை கலக்கி வருகிறது.

யார் சொன்னா சென்னை மனிதம் இல்லாத ஊருனு?

No comments :

Post a Comment