திமுக-அதிமுகவிற்கு இடையே 1.1 சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் : கருணாநிதி

Share this :
No comments


சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக பெற்றுள்ள வாக்குகளின் வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம் மட்டுமே என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகச் சட்டப் பேரவைக்கான 15வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து 232 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 இலட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க. அணிக்கு 1 கோடியே 76 இலட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.கழக அணிக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான்; அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

எப்படி என்றாலும் அவர்கள் ஆளும்கட்சி. நாம் எதிர்க் கட்சி. எதிர்க் கட்சி என்றால், தமிழகச் சட்டப் பேரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, திருவாரூர் தொகுதியில் கழக வேட்பாளராக இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட நிலையில், 1 இலட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை அளித்து, தமிழ்நாட்டிலே மிக அதிக வித்தியாசமான 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைக் குவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

No comments :

Post a Comment