தேங்காய் சாம்பார்

Share this :
No comments

எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக சாம்பாரில் தேங்காய் அரைத்து ஊற்றி சமைத்துப் பாருங்கள். இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இந்த சாம்பாரை தேங்காய் சாம்பார் என்று அழைப்பர். சரி, இப்போது அந்த தேங்காய் சாம்பாரை எப்படி சமைப்பதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - 1 1/2 கப்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

சாம்பாருக்கு...

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)

கேரட் - 1 (நறுக்கியது)

பீன்ஸ் - 6 (நீளமாக நறுக்கியது)

வெண்டைக்காய் - 5 (நறுக்கியது)

புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் - 1/2 கப்

கொத்தமல்லி - சிறிது

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பின்பு அத்துடன் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு மற்றும் சர்க்கரை தூவி, நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

அதற்குள் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தேங்காய் சாம்பார் ரெடி!!!



No comments :

Post a Comment