கல்விக் கடன்பெற்ற மாணவியை துன்புறுத்திய வங்கிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தமிழ்நாட்டில் கல்விக் கடன்பெற்ற மாணவியின் குடும்பத்தினரை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பொதுத்துறை வங்கி, இது குறித்து நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடனைப் பெற்ற மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படத்தை காட்சிப்படுத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஃஆப் இந்தியா, இவர்கள் கடனைத் திரும்ப செலுத்தாமல் காணமல் போனதாக விளம்பரப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாஞ்சூர் வங்கிக் கிளையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வங்கியில் பெறப்பட்டக் கடனை திரும்ப செலுத்தக்கூறி தொலைபேசி மிரட்டல் விடப்பட்ட காரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாணவியின் தந்தை மரணமடைந்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பிற்காக வங்கியிடமிருந்து பெறப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் கடனை 120 தவணைகளில் செலுத்தக் கால அவகாசம் இருந்த சமயத்திலும், அதற்கு முன்னதாகவே பாதிக் கடன் தொகையை தாங்கள் செலுத்தியுள்ளதாக புகார் அளித்திருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் தங்களது புகைப்படங்களை பொது இடத்தில காட்சிப்படுத்தி துன்பத்திற்கு உள்ளாக்கியதாக, அவர்கள் புகார் கூறியுள்ளனர். இந்தப் புகார் மீது தேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
அதன் முதற்கட்டமாக பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஃஆப் இந்தியாவின் மும்பை மத்திய அலுவலகத் தலைவர், அதே வங்கியின் மாஞ்சூர் கிளை மேலாளர், நீலகிரி மாவட்ட நீதிபதி, அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய நான்கு பேரும் இந்தப் புகார் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் தங்களின் பதிலை அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கூறியிருக்கிறது.
கல்விக் கடன் திட்டப் பயனாளிகளின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்துவது என்பது மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் பிபிசியிடம் தெரிவித்தார். குறிப்பாக, கிரமாப்புற ஏழை பயனாளிகளின் கண்ணியத்தை குலைக்கும் செயல் இது என்று அவர் குறிப்பிடுகிறார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment