ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவன் தாயுடன் செல்வதாக கூறியதால் பரபரப்பு

Share this :
No comments

ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்ல விரும்புவதாக கூறியதை அடுத்து வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் சிவசுப்பிரமணியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆசிரியை கோதைலட்சுமி [26] என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவன் கடைசித் தேர்வு எழுதி முடித்தக் கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து மாயமாகினர். பின்னர், மாணவனின் பெற்றோர், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறி காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புளியங்குடி துணை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப்படை அமைத்து மாயமான மாணவன், ஆசிரியை ஆகியோரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் பாண்டிச்சேரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர், திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் கடந்த 10ஆம் தேதி திருப்பூருக்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, கோதைலெட்சுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இருவரும் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தினர். அதற்கு பிறகு நீதிபதியின் உத்தரவின் பேரில், ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டனர். கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிவசுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் ஆகியோர் மாணவனிடம், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான். இதனை தொடர்ந்து, ’நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்?’ என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர், தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது. ஆசிரியை கோதைலெட்சுமியின் தந்தையும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்ததை அடுத்து அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியை கோதைலெட்சுமி, ”நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். புதுச்சேரி சென்ற நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். எங்களை பிரித்துவிடாதீர்கள் நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment