தேர்தல் முடிவுகளால் தி.மு.க வட்டாரம் கலவரப்பட்டுப் போனாலும், தமிழக சட்டசபையின் வரலாற்றில் இவ்வளவு பெரிய எதிர்க்கட்சியை எப்படித் தாங்கப் போகிறார் ஜெயலலிதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்தபோது கொஞ்சம் ஆடித்தான் போனார் கருணாநிதி. அ.தி.மு.க அதிக இடங்களைப் பெற்று மிகப் பெரிய எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்தது. மைனாரிட்டி தி.மு.க அரசின் முதல்வராக பதவியேற்ற கருணாநிதி, " என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை. மிகுந்த வேதனையோடுதான் பதவியில் அமர்கிறேன்" என்றார். அதைப்போலவே, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக தி.மு.க மாறியிருக்கிறது. 'இவ்வளவு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இருப்பதை ஜெயலலிதா விரும்ப மாட்டார். இது ஒருவகையில் தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது' என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
தேர்தலில், 'பூரண மதுவிலக்கு' என்ற கோஷத்தை தி.மு.க தீவிரமாக முன்னெடுத்தது மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதற்குக் காரணம், தி.மு.க புள்ளிகள் நடத்தும் மதுபான ஆலைகள் குறித்த தகவல்கள் மக்கள் மத்தியில் வேகமாக பரப்பப்பட்டதுதான். அதிலும், நாள்தோறும் தினசரி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் தி.மு.க தலைமை கொடுத்த விளம்பரங்கள் மக்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதைப் பற்றி கனிமொழியிடம் பேசிய நிர்வாகி ஒருவர், " டீக்கடையில் அமர்ந்து பேசுவர்கள்கூட நமது விளம்பரத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். பொதுவாக, ஆளுங்கட்சிதான் தேர்தல் நேரத்தில் இப்படி ஆடம்பரமாக விளம்பரம் கொடுப்பார்கள். நாம் எதிர்க்கட்சி வரிசையில்கூட இல்லை.
இதைப் பற்றிப் பேசும் மக்கள், ' இவங்ககிட்டதான் பணம் அதிகமாக இருக்கிறது. இப்பத்தான் வெளியில வருது' எனப் பேசுகிறார்கள். நமக்கே எதிராகப் போகிறது" என வருத்தத்தைச் சொல்லியிருக்கிறார்.
கூடவே, " எந்தத் தொலைக்காட்சியைத் திறந்தாலும், கலைஞர் பேசுகிறார், ஸ்டாலின் பேசுகிறார், மனிதன் படம் பற்றி உதயநிதி பேசுகிறார். பொதிகை தொலைக்காட்சியில் மட்டும்தான் யாரும் பேசுவதில்லை. விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டால்தான் நமக்கு நல்லது" எனவும் தலைமையிடம் சொல்லியிருக்கிறார்கள்.
'எங்கள் ஆட்சியில் நாங்கள் இவ்வளவுதான் கடன் வைத்திருந்தோம். அவர்கள் வந்ததும் இவ்வளவு தூரத்திற்கு உயர்த்திவிட்டார்கள்' என்ற பிரசாரம் எடுபடவில்லை. மேலும் 'புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள்' என ஸ்டாலின் பேசும்போது, 'இத்தனை வருஷமாக ஆட்சியில இருந்து எதையும் செய்யலைன்னு ஒத்துக்கறாங்களா?' என்ற விமர்சனமும் எழுந்தது. தவிரவும், 'இவ்வளவு இடங்கள் கிடைத்ததில் இருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தி.மு.கவை படிப்படியாகத்தான் மன்னிக்க முடியும். ஒரே அடியாக மன்னித்தால் மீண்டும் ஆடத் தொடங்கிவிடுவார்கள் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்' என்றார் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.
அரசியல் சதுரங்கத்தில், பல்லாயிரம் கோடி ரூபாய்களை இறைத்து வாக்குகள் வாங்கப்பட்டன என்பது பாமரனுக்கும் தெரியும். ஆட்சியில் அமரப் போகிறவர்களுக்கு, மிகப் பெரிய எதிர்க்கட்சியைக் கொடுத்து செக் வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். வரும் காலங்களில் தமிழகத்தின் நலனைத் தீர்மானிப்பவையாக அவை செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் சேர்ந்தே எழுகிறது.
செய்வார்களா... இவர்கள் செய்வார்களா?
No comments :
Post a Comment