ஆக, இனி என்ன செய்யும் எதிர்க்கட்சியான தி.மு.க..?!

Share this :
No comments


இப்போதே சமூக ஊடகங்களில் அவநம்பிக்கையை சிலர் விதைக்க துவங்கிவிட்டார்கள். போராட்டக் களங்களில் நின்ற சுப. உதயகுமார், தேர்தல் களத்தில் மிகவும் பின் தங்கி இருப்பது, இங்கு சிலருக்கு தேர்தல் அரசியல் மீதே வெறுப்பை உண்டாக்கி உள்ளது. அந்த வெறுப்பை சமூக ஊடகங்களின் வழியாக தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வெறுப்பை உமிழும் எத்தனை பேர் தாங்கள் விரும்பிய மாற்றத்திற்கு உழைத்தார்கள் என்று தெரியவில்லை. உழைப்பது என்பது கட்சிகளுக்காக உழைப்பதில்லை. வாக்குச் சாவடியில் நின்று வாக்களிப்பது. உண்மையில் மாற்றத்தை முன்வைத்தவர்கள் படுதோல்வி அடைவது வருந்ததக்கதுதான் என்றாலும், அதற்காக வெறுப்பை உமிழத் தேவையில்லை. ஆம். ஜனநாயகத்தில் ஆளும் கட்சிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அவ்வளவு முக்கியத்துவம் எதிர்க்கட்சிக்கும், எதிர் தத்துவங்களுக்கும் இருக்கிறது. உண்மையில் அரசை வழி நடத்தி செல்பவர்கள் இவர்கள்தான்.

மாற்றம் இப்படியாக இருக்க வேண்டும்

வெற்று சமாதானங்கள் சொல்லாதீர்கள்...! இவ்வளவு உழைத்து என்ன பயன்...? மக்கள் மீண்டும் திமுக அதிமுகவுக்கான தேர்தலாகதானே இத்தேர்தலை மாற்றி உள்ளார்கள். குறைந்தபட்சம் மற்ற தரப்பினருக்கும் சில தொகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தால், இன்னும் உத்வேகமாக அவர்கள் உழைப்பாளர்கள் இல்லையா...? உண்மையில் மக்கள் மாற்றத்தை விரும்பவில்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது - இது உங்கள் வாதமாக இருந்தால், மக்களை குற்றம் சுமத்துவதற்கு முன் சில நிமிடங்கள் அமர்ந்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆம், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் தேர்தல் கூட்டணியாக மாறிய ஒரு அணி, தம் மீதான சாதிய அடையாளங்களை போக்கிக் கொள்ளாமல் வித விதமான விளம்பரங்களில் மட்டும் மாற்றத்தை முன் மொழிந்த இன்னொரு கட்சி, சக மனிதன் மீது வெறுப்பை உமிழ வைக்கும் அளவிற்கு இனவாதம் பேசிய இன்னொரு கட்சி... என இவற்றை வைத்துக் கொண்டு சமூகத்தில் எப்படி மாற்றத்தை கொண்டு வர முடியும்...? மக்கள், இருக்கும் சிக்கலே போதும் என்று நினைத்து இருக்கிறார்கள். அதைதான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

உண்மையாக அரசியலில் மாற்றம் வர வேண்டுமென்று நினைத்தால், அது வேர்களிலிருந்து வர வேண்டும். மக்களின் நம்பிக்கையை நீங்கள் பெற வேண்டும். மக்கள் நம்பிக்கையை வென்றெடுப்பது என்பது, சில காலங்களில் நடப்பதல்ல. அது ஒரு நீண்ட கால செயல்பாடு. இத்தனை காலம் மாறி மாறி திமுக, அதிமுக முதுகில் பயணித்தவர்கள், ஒரு தேர்தலில் மக்கள் நலன், மாற்றம் என்று சொன்னால் எப்படி மக்கள் நம்புவார்கள்...? மக்கள் இதையும் மற்றொரு தேர்தல் கூட்டணியாக தானே நினைப்பார்கள். இத்தனை காலம் அதுதானே நடந்தும் இருக்கிறது.

மாற்றத்தை முன்மொழிந்தவர்களுக்கு மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால், இனிதான் அவர்கள் சுற்றி சுழன்று வேலை பார்க்க வேண்டும். மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களையும் அரசியலில் பங்கெடுக்க செய்ய வேண்டும். இது ஒரு நீண்ட கால் செயல். இதை செய்யாமல், மக்களை திட்டித் தீர்ப்பது மட்டும் எந்த பயனையும் தராது.

வலிமையான எதிர்க்கட்சி நல்லாட்சிக்கு வழிவகுக்கும்:

இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் இன்னொன்றையும் உணர்த்தி இருக்கிறார்கள். கடந்த தேர்தலைப் போன்றல்லாமல், இந்த முறை வலிமையான எதிர்க்கட்சி வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்கள். அதனால்தான் திமுகவும் சென்ற தேர்தலை போல் மோசமாக தோல்வி அடையாமல், குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்று இருக்கிறது.

எதிர்க்கட்சி என்றால் எதிரி கட்சி என்று எண்ணாமல், இருவரும் கரம் கோர்த்து வேலை செய்ய வேண்டும். அரசும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இரு கட்சிகளுக்கும், அரசியல் நலன் என்பதை விட மக்கள் நலன்தான் பிரதானமாக இருக்க வேண்டும். “தனது குழந்தைகளுக்கு என்ன வேண்டுமென்று ஒரு தாய்க்குதான் தெரியும்...” என்றார் ஜெயலலிதா. “தொண்டை சரியில்லாமல் போனாலும் என் தொண்டை நிறுத்திக் கொள்ள மாட்டேன்” என்றார் கருணாநிதி.

இந்த வார்த்தைகள் உண்மையெனில், இதைதான் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

No comments :

Post a Comment