தி.மு.கவை வீழ்த்திய நோட்டா! -பதற வைத்த 16 தொகுதிகள்

Share this :
No comments


தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால், ' 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பை பறித்திருக்கிறது நோட்டா வாக்குகள்' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சட்டசபை தேர்தலில் 'மாற்று' என்ற கோஷத்தை முன்வைத்து மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவு, மாற்று கோஷத்திற்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்துவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற கோஷமும் எடுபடவில்லை. அதே நேரத்தில், வெற்றிக் கோட்டைத் தொடுவதில் தி.மு.க கோட்டைவிட்டு விட்டது. பதினாறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், நோட்டா வாக்குகள் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளன.

ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4,994. தி.மு.க தோற்றுப் போனதோ 1,395 வாக்குகள் வித்தியாசத்தில். பர்கூரில் 982 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது தி.மு.க. இங்கு நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 1,382. சிதம்பரத்தில் நோட்டாவுக்கு 1,724 வாக்குகள் கிடைத்தது. தி.மு.கவோ 1,506 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைப் பறிகொடுத்தது. கரூரில் 3,595 வாக்குகள் நோட்டாவுக்கு, தி.மு.கவோ 3,154 ஓட்டில் தோற்றது. கிணத்துக்கடவு தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்தவை 3,884, தி.மு.கவுக்கு தோல்வியோ 1,332 வாக்குகள் வித்தியாசத்தில்.

கோவில்பட்டியில் 2,350 வாக்குகள் நோட்டா கணக்கில் வந்தன. இதே தொகுதியில் 428 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தோற்றது. மொடக்குறிச்சி தொகுதியில் நோட்டாவுக்கு 2,715 வாக்குகள் விழுந்தன. தி.மு.க இதே தொகுதியில் 2,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இதேபோல் ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பேராவூரணி, ராதாபுரம், தென்காசி, திருப்போரூர், தியாகராய நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நோட்டாவுக்கு, தி.மு.கவின் தோல்வி வித்தியாசத்தைவிட அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஏறக்குறைய 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு இப்படி நோட்டாவால் பறிபோயுள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.கவின் வாக்குகளை தே.மு.தி.க பிரித்ததால், தி.மு.க தோற்றது. இந்தமுறை மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க, பா.ம.க எனப் பல கட்சிகள் சிதறிப் போட்டியிட்டாலும், தி.மு.கவின் வாக்குவங்கி எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. 'எந்தக் கட்சி யாருடைய வாக்குகளைப் பிரிக்கும்? என்றுதான் தலைவர்கள் கணக்குப் போட்டார்களே தவிர, நோட்டாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், பிரதான கட்சிகளை 'நோட்டா' வை நோக்கி பார்க்க வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

அரசியல்வாதிகள் மீதும் அரசியல் மீதும் அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களால், மக்கள் நலக் கூட்டணி, சீமான் என களத்தில் வலம் வந்த கட்சிகளை விடவும் நோட்டா எடுத்த 1.3 சதவீத வாக்குகள் மிக முக்கியமானவை மட்டுமல்ல, அரசியல் அரங்கையும் அலற வைத்துவிட்டன.

No comments :

Post a Comment