'போய் வா... நதியலையே' என்று பாடியும் அனுப்ப முடியாமல், பாராட்டியும் அனுப்ப முடியாமல் சென்னை வானிலை ஆராய்ச்சி மையப் பகுதி இன்று மாலை, சற்று மேகமூட்டத்துடன்தான் காணப்பட்டது. ஆம், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் இன்று (31.3.2016) மாலை பணி ஓய்வு பெற்றார்.
மழையே பொழியாமல் காய்ந்த பூமியாக காட்சியளிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துதான், தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும் என்று எதிர்காலத்தில் கணித்துச் சொல்லக் கூடிய ரமணன் பிறந்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை, அதனை தொடர்ந்து ரமணன் தினமும் வெளியிட்ட வானிலை குறித்த அறிவிப்புகளும் அவரை, பள்ளிக்குப் போகாமல் அடம் பிடிக்கும் பிள்ளைகளின் கனவு நாயகனாகவே மாற்றியது.
தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெருமழையின் போது ரமணன் குரல்தான் மூழ்கிய வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்களுக்கான ஒரே ஆறுதல் குரலாக இருந்தது என்றால் அது மிகையல்ல. அதே போல் மீம்ஸ்களால் அதிகளவு ஆராதிக்கப்பட்ட ஒரு அரசு ஊழியர் ரமணனாகத்தான் இருக்க முடியும்.
" சார்... முடிந்து விட்டதா? நாங்க வந்துக்கிட்டே இருக்கோம்.. ப்ளீஸ், ப்ளீஸ், போயிடாதீங்க" என்று பகல் 12 மணி பிரஸ் மீட்டை தவற விட்டு 1.30-க்கு ரமணனிடம் கெஞ்சும் செய்தியாளர்கள் அதிகம். "வாங்க, வாங்க இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு காத்திருக்கும் ரமணனை பகல் 3 மணி வரை சாப்பாட்டுக்கு அனுப்பாமல், அடுத்தடுத்து படையெடுக்கும் ஊடகத்தினரின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுதான்"
எந்த சிக்கலிலும் மாட்டாத ரமணனை, அண்மையில் மிரட்டிய பெருமழையின் போது அரசியலும் கொஞ்சம் (முதல் முறையாக) மிரட்டிதான் பார்த்தது. ஆம், பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்," என்னங்க நீங்க இப்படி சொல்றீங்க... பரவலாக ஆங்காங்கே மழை பெய்யும்னு... எங்கெங்கே பெய்யும் னு சரியாகச் குறிப்பிட்டுச் சொல்லுங்க" என்று ஒரு வாய்ப்பின் போது சொல்லி வைக்க, அது அன்றைய பொழுதின் 'மழை' வறுகடலையானது.
' இன்று மாலை முதல் வானம் சற்றே மேக மூட்டத்துடன் காணப்படும்... ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும்... ஒரு சில இடங்களில் கனத்த மழையும் பெய்யக் கூடும் ' என்கிற அந்தக் குரலுக்குரியவரை அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. ஆனால், இந்த ஓய்வு என்பது சட்ட ரீதியானது எனும்போது அதில் குறை காணலாகாது.
ரமணனின் பணிக்காலத்தின்போது, சிலர் அவர் இடத்தில் வந்து வானிலை அறிக்கை வாசிப்பது உண்டு. ஆனால், நமக்குக் கேட்டுக் கேட்டுப் பழகிய குரல் என்பதாலும், ரமணனின் அனுபவ பொறுமை எடுத்த எடுப்பிலேயே கைக்கு வருவது அத்தனை சாத்தியப் படாது என்பதாலும் கொஞ்சம் தொய்வு நிலை இருக்கிறது என்பதே பொதுவான ஒரு அபிப்ராயம்.
அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ரமணன்கள், பொறுமையின் சிகரங்கள் ஒவ்வொரு துறைக்கும் காலந்தோறும் தேவை...
ரமணன் விடைபெற்றாலும், ஒவ்வொரு மழைக்கும் ஒலித்த அவரது குரல் என்றும் தமிழக மக்களுடனேயே...!
No comments :
Post a Comment