விஜயகாந்தை வீழ்த்திய வைகோ : திரை மறைவில் நடந்தது என்ன?

Share this :
No comments


யாருடன் கூட்டணி வைப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் விஜயகாந்த்.

திமுகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், தேமுதிக தொண்டர்களும் அதையே விரும்புவதால், வேறு வழியில்லாமல் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியினருடன் இணைந்து அனைத்து வதந்திகளுக்கும் தன்னுடைய பாணியில் பதில் கூறியுள்ளார் விஜயகாந்த்.

பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் என்னதான் செய்திகள் வெளியிட்டாலும், விஜயகாந்த் தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். தேமுதிக தனித்துப் போட்டி என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தாலும், விஜயகாந்த் தலைமையை ஏற்பவர்கள், எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்ற அழைப்பும் தேமுதிக சார்பில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த அழைப்பை மக்கள் நலக் கூட்டணி, வாய்ப்பாக மாற்றி, விஜயகாந்தை கிங்காக ஒப்புக்கொண்டு கூட்டணி ஒப்பந்தத்தை போட்டுவிட்டது. ஒருபக்கம் திமுக தலைவர் கருணாநிதி விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தார். மறுபுறம் ஸ்டாலினோ “ தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை” என்றார். இந்த நிலைப்பாடு திமுக தொண்டர்களையே குழப்பியது.

ஆனால், திமுக குழப்பிய குட்டையில் வைகோ மீன் பிடித்திருக்கிறார். என்னதான் நடந்தது?.

அதிமுக திமுக கட்சிகளை ஊழல் கட்சி என்றும், அதற்கு மாற்றாகத்தான் தான் கட்சியை தொடங்கியதாகவும், தேமுதிக உதயமானபோது விஜயகாந்த் கூறினார்.

ஆனால், வேறு வழியின்றி, 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்தால், மக்களுக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் குறைந்துவிடும் என்று விஜயகாந்த் நினைத்திருக்கலாம்.

பாஜகவுடன் கூட்டணி பேசினார். ஆனால் அவர்கள் விஜயகாந்தை முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மீதமிருக்கும் ஒரே வாய்ப்பான மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளார் விஜயகாந்த்.

மக்கள் நலக் கூட்டணி உதயமானவுடன், வைகோவிடம் பேசிய விஜயகாந்த் “உங்களுடன் கூட்டணி அமைக்க நான் தாயாராக இருக்கிறேன். ஆனால் தேர்தல் செலவுக்கு என்ன செய்வது?” என்று கேட்டுள்ளார். மேலும் “அதற்காக, பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியை நம் கூட்டணியில் இழுக்கலாம்” என்று கூறியுள்ளார். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பதில் மக்கள் நலக் கூட்டணி உறுதியாக இருந்துள்ளது. எனவே அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது.

அதன்பின் திமுகவிடம் கூட்டணி பேரம் பேசினார் விஜயகாந்த். திமுக வெற்றி பெற்றால், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்று திமுக தரப்பு தெளிவாக கூறிவிட்டது. மேலும், விஜயகாந்த் கேட்ட அதிகமான தொகுதிகளை ஒதுக்க கருணாநிதி தயாராக இல்லை எனத் தெரிகிறது. அதனால், திமுக கூட்டணிக்கு செல்வதை அவர் தவிர்த்திருக்கலாம்.

இதற்கிடையில், விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க வைகோ ஏற்கனவே திரைமறைவு வேலையை தொடங்கியிருந்தார். கடந்த சில நாட்களாகவே வைகோ சார்பில் விஜயகாந்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் தேமுதிகவிற்கு 124 இடங்கள் என்ற விஜயகாந்தின் முடிவுக்கு மக்கள் நலக் கூட்டணி செவி சாய்த்தது.

தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தால், கண்டிப்பாக பல தொழிலதிபர்கள் நிதி கொடுப்பார்கள். எனவே தேர்தல் செலவு பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி, தேமுதிக தரப்பை சம்மதிக்க வைத்துள்ளார் வைகோ.

மேலும், பாஜகவுடன் இணைந்து தோற்றுப்போவதை விட, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து மாற்றத்தை முன் வைத்து மக்களை சந்திப்பதையே பிரேமலதா விரும்புகிறார்.

அதிமுக, திமுக கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுகள் கண்டிப்பாக இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்று விஜயகாந்த் நம்புகிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம்....

No comments :

Post a Comment