கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Share this :
No comments

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் புதிதாக கட்டுப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்டுமான பணி நடைபெற்று வந்த பாலமானது இன்று திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்து உள்ளது. பாலம் இடிந்து விழுந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்களும் அனுப்பட்டு உள்ளது. பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவிசெய்து வருகின்றனர். மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் செய்தியாளர்களிடம், "பாலம் இடிந்து விழுந்துவிட்டது, சுமார் 150 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்" என்று தெரிவித்தார். பாலம் இடிந்ததற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment