பல வழக்குகளில் தொடர்புடைய யுவராஜுக்கு எப்படி ஜாமீன் வழங்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை மே முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி, அந்த பெண்ணுடன், கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள கோயிலுக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்தது.
இதுகுறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ், காவல்துறையினரிடம் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ், ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "யுவராஜ் 150 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், யுவராஜுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதி, ‘இத்தனை நாட்கள் சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், "கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளது. கோயிலில் வைத்து கோகுல்ராஜை பிடித்து செல்வது, காரில் ஏற்றுவது போன்ற வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினர் சேகரித்துள்ளனர். கோகுல்ராஜை மிரட்டி கைப்பட எழுதி வாங்கியது, போனில் மிரட்டல் விடுத்தது போன்றவைகளும் உள்ளன. யுவராஜ் சாதி அமைப்பு ஒன்றை நடத்துகிறார். அப்பகுதியில் செல்வாக்குடன் உள்ளார். எனவே, இவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார். இவர் மீது ஈமு கோழி மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன" என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பல வழக்குகளில் தொடர்புடைய இவருக்கு எப்படி ஜாமீன் வழங்க முடியும்? என்று கேள்வி எழுப்பியதோடு, மனு மீதான விசாரணையை மே முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
No comments :
Post a Comment