விஜய் டிவிக்கு தெரியாமல் நடந்திருக்காது : சூப்பர் சிங்கர் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து
சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டியில், சினிமா பின்னணிப் பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷனை சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுத்த விவகாரம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, சென்னையில் கடந்த 18ஆம் தேதி நடந்தது. இதில், ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதல் பரிசு வென்றார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரூ.75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக தரப்பட்டது.
ஆனால், அரவிந்தாக்ஷன் புதிய பாடகர் அல்ல, அவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பாடகராக பல படங்களில் பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களியில் இவர் பாடல் பாடியுள்ளார்.
புதிய குரல்களை அறிமுகப்படுத்தவே இந்த போட்டி என்று கூறிக் கொண்டு, ஏற்கனவே பல படங்களில் பாடிய ஒரு பின்னணி பாடகரை விஜய் டிவி எப்படி தேர்வு செய்யலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகை மற்றும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் “ஆனந்த் மிகவும் திறமையானவர். சின்சியரானவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதாக எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். ஆனால் அந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானது என்று எனக்கு அப்போது தெரியாது. அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் இப்போது அவரை பற்றி வரும் செய்திகள் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இது நிச்சயம் விஜய் டிவிக்கு தெரியாமல் நடந்திருக்காது.
இந்த போட்டியில் வெற்றி பெற அவர் தன்னுடைய நேரத்தையும், உழைப்பையும் அவர் கொட்டியிருக்கிறார். ஆனால், இப்போது அது அனைத்தும் ஒரு நொடியில் மறைந்து போய்விட்டது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment