முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்- மக்கள் நலக்கூட்டணி அறிவிப்பு!
மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் விஜயகாந்த்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் விஜயகாந்த் காத்திருந்து திரும்பி சென்றதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே தே.மு.தி.க.வுக்கு தலைவர் கலைஞர் அழைப்பு விடுத்து இருந்தார். அதனைத்தான் அவர் குறிப்பிட்டார். புதிதாக அழைப்பு எதுவும் விடுக்கபடவில்லை. கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று கூறினார்.
ஸ்டாலின் இந்த கருத்து தேமுதிக தலைமையை அதிர்ச்சியடைய செய்தது. இந்தநிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தை சந்தித்து பேசினர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக சார்பில் சுதீஷ், பிரேமலா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Labels:
News
,
politics
No comments :
Post a Comment