ஆட்டம் ஆரம்பமானது : கமல் பட தலைப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு
கமல் புதிதாக நடிக்கவுள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தின் தலைப்பை மாற்றக்கோரி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல் தனது மகள் ஸ்ருதியுடன் சேர்ந்து நடிக்கவுள்ள படம் ‘சபாஷ் நாயுடு’. தசாவதாரத்தில் கமல்ஹாசன் நடித்து, ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பல்ராம்நாயுடு என்ற கதாபாத்திரத்தை, ஒரு முழு படத்தின் கதாநாயகனாக உருவாக்கி, இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலரும், வானூர் தொகுதி வேட்பாளருமான ரவிக்குமார் இந்த படத்தின் தலைப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தன்னுடைய சமூக வலைப் பக்கத்தில் எழுதியதாவது:
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. ஹரியானாவில் மட்டுமே நடப்பதாக கூறப்பட்ட ஆணவக் கொலைகள் தற்போது இங்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்த வேளையில், சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ அல்லது பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.
ஏற்கனவே கமல்ஹாசன் சாதி தலைப்பில் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் சில கிராமங்களில் நீங்கவில்லை. இந்நிலையில், மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், ஒரு படத்தின் தலைப்பிலோ அல்லது வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் பட தலைப்பிற்கு எதிர்ப்பு கிளம்பிய விவகாரம், தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment