தெறியின் 12 நாள் வசூல் நிலவரம்
விஜய் நடித்த படங்களில் தெறி வசூல் சாதனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. முதல் 12 தினங்களில் தெறி தமிழகத்தில், தமிழகத்துக்கு வெளியே இந்தியாவில், இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வசூல் நிலவரங்கள் ஹாலிவுட் மற்றும் இந்திப் படங்களைப் போல வெளிப்படையானவை அல்ல. தோராயமானவை. தமிழகத்தின் தனித் திரையரங்குகள் பெரும்பாலும் வரி ஏய்ப்புக்காகவும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களை ஏமாற்றுவதற்காகவும் டிக்கெட் விற்பனையை குறைத்தே காண்பிக்கின்றன. அல்லது 50 ரூபாய் டிக்கெட்டுக்கு பல மடங்கு அதிகம் வசூலித்துவிட்டு 50 ரூபாய் என்றோ, 100 ரூபாய் என்றோ தங்களுக்கு தோதான கணக்கை காண்பிக்கின்றன. இந்த போலி கணக்குகளை வைத்து ஒரு படத்தின் வசூலை அறிந்து கொள்வது சிரமம். தெறி வசூலும் தோராயமாகவே கணக்கிடப்பட்டுள்ளது.
முதல் 12 தினங்களில் தெறி தமிழகத்தில் 66.97 கோடிகளை வசூலித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஏரியாவில் பெரும்பாலான திரையரங்குகளில் தெறி வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால் இந்த கணக்கில் இன்னும் சில கோடிகள் அதிகமாகியிருந்திருக்கும்.
சென்னையில் தெறி முதல் 18 தினங்களில் 8.76 கோடிகளை வசூலித்துள்ளது. ஷங்கரின் ஐ பட வசூலை எட்ட தெறிக்கு ஒரு கோடியே தேவை. இந்த வார இறுதிக்குள் அவ்வசூலை தெறி எட்டும். இந்த பகாசுர வசூலுக்கு முக்கிய காரணம், செங்கல்பட்டில் படம் வெளியாகாததால் அங்குள்ள ரசிகர்கள் சென்னைக்கு சாரை சாரையாக படையெடுத்தனர். தெறி இன்னும் சென்னையில் வசூல் வேட்டையை தொடர இதுவும் முக்கிய காரணம்.
முதல் 12 தினங்களில் தமிழகத்துக்கு வெளியே பிற மாநிலங்களில் தெறி 33.85 கோடிகளை வசூலித்துள்ளது. முதல் முறையாக கர்நாடகாவிலும் தெறி நல்ல வசூலை பெற்றுள்ளது. தமிழ்ப் படங்களின் வசூல் பிற மாநிலங்களில் அதிகரிப்பது தமிழ் சினிமா வர்த்தகத்துக்கு நலம் சேர்ப்பது.
வெளிநாடுகளில் தெறி முதல் 12 தினங்களில் 42.70 கோடிகளை வசூலித்துள்ளது. முக்கியமாக யுகே பாக்ஸ் ஆபிஸில் முதல் வார இறுதியில் தெறி எட்டாவது இடத்தைப் பிடித்தது. யுஎஸ்ஸில் விஜய் படங்களில் தெறியே அதிகம் வசூலித்துள்ளது.
இந்த அதிரடி வசூல் காரணமாக தெறி படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய்யும், அட்லியும் ஆர்வம் காட்டுகின்றனர். தெறி வெளியாவதற்கு முன் நிருபர்கள் தெறி இரண்டாம் பாகம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அட்லி, தெறி படத்துக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை வைத்தே தெறி இரண்டாம் பாகம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
தெறிக்கு ரசிகர்கள் மெகா ஆதரவு அளித்துள்ளனர். அதனால் தெறி இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகப்பட்டிருக்கிறது. தெறி இரண்டாம் பாகத்தை பிரபு, ராம்குமாரின் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் எனவும் தகவல் உள்ளது.
தெறியின் வெற்றி பல்வேறு கதவுகளை திறப்பதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment